
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை யணிந்தவனே! மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. கீளார் கோவணமும் திருநீறு மெய்ப்பூசி உன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ! வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. எம்மான் எம்மனை என்றெனக்கு எட்டனைச் சார்வு மாகார் இம்மாயப் பிறவி பிறந்தேன், இறந்தேன் எய்த்தொழிந்தேன்! மைம்மாம் பூம்பொழில் சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பண்டே நின்னடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசு அறுத்தேன் வண்டார் பூம்பொழில் சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பர மாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில் சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. நாளார் வந்து அணுகி நலியா முன்னம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ! மாளா நாள் அருளும் மழ பாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. சந்தாருங் குழையாய் சடைமேற் பிறைதாங்கி நல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள் சூழ் மழ பாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்களிட, மிகு செம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில் சூழ் மழ பாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. நெறியே நின்மலனே நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே நீர்மையனே கொடி ஏரிடையாள் தலைவா மறி சேர் அங்கையனே மழ பாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. ஏரார் முப்புரமும் மெரியச் சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழ பாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே!

